Monday, April 7, 2008

பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரை




"பக்தி
இலக்கியத்தின்



பன்முகத்தன்மை"


"நா.கண்ணன்"
சிறப்புப் பேராசிரியர்,
கொரியா மாகடல் ஆய்வு மையம்,
தென்கொரியா.

கட்டுரைச் சுருக்கம் ::.

பக்தி இலக்கியத்தின் தோற்றுவாய் சங்க காலத்திலேயே அறியப்பட்டாலும் அது இறையனார் களவியல் தோன்றியபின் பொலிவு பெற்று, மடை மாற்றம் பெற்று தமிழ் இலக்கியப் பரப்பில் ஆழமாகவும், விரிவாகவும் வேரூன்றத் தொடங்குகிறது. காதல் எனும் மனித உணர்வு உன்னதம் பெறும் போது பக்தி மலர்கிறது. பக்தியில் சுயநலம் இருப்பதில்லை. மானுட மேன்மை வேண்டப்படுகிறது. சரித்திர நோக்கில் பார்த்தால் பக்தியின் பன்முகத்தன்மை, சமூக நலம் தமிழகத்தில் தோன்றி இந்தியா முழுவதும் பரவியிருப்பது காணக்கிடைக்கிறது. ஐரோப்பிய வருகைக்குப் பின்னும் முன்னும் அது இந்தியா தாண்டி கிழக்கு, மேற்கு என்று பரவியிருக்கிறது. இறைவனை இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடும் சக்தி விரயத்தைக் குறைத்து வாழும் இடங்களிலே அவன் குணங்களைப் பூரணமாய் உணர பக்தி உதவியிருக்கிறது. தேவபாஷை என இருந்த வடமொழியின் இடத்தை அன்பின் வழியில் இடப்பெயர்வு செய்திருக்கிறது பக்தி. இதுவே தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டு சாகா இலக்கியங்களை தமிழுக்கு வழங்கியுள்ளது. பக்தியின் தோற்றம், வளர்ச்சி, பலன்கள் இவைகளைப் பற்றிப் பேசும் இக்கட்டுரை பக்தியின் சமகாலத் தேவை குறித்தும் அக்கறை கொள்கிறது.

கட்டுரை::

முன்னுரை:

“யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்று கூறிய கணியன் பூங்குன்றனின் கூற்றை ஓர் வணிகக் குறிப்பென்று கொண்டால் சங்கம் தொட்டு தமிழன் உலகு தழுவி பயணப்பட்டான் என்று கொள்ளலாம். எகிப்தின் அருங்காட்சியகங்களில் தமிழ் எழுத்துக் கொண்ட சுட்ட ஓடுகள் கிடைக்கப்பெறுதல் இதற்குச் சான்று பகரும் [1]. மேலும் ஆய்வாளர்களால் ஆய்ந்து நிருவப்பட்ட “பட்டுப்பாதை” எனும் பண்டைய வணிகச் சுவட்டில் சேர நாடும், பாண்டிய நாடும் இடம் பெறுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் [2]. அன்று தொடங்கிய பயணம் தமிழனின் பண்பாட்டு எச்சங்களை உலகெங்கும் இட்டு வைத்துள்ளது. பல்லவ, சேர அரசர்கள் தமிழகத்தில் அரசோட்சிய அதே காலக்கட்டத்தில் கம்போசியா என்று அழைக்கப்பட்ட தென்கிழக்காசிய நாட்டில் சேர, பல்லவ அரசர்களின் பெயர்களுடன் ஒரு இந்துப் பேரரசு அமைக்கப்பட்டிருந்ததை ஆய்வுகள் சுட்டுகின்றன [3]. தமிழ் மொழி எழுத்துக்கள் போன்றேயுள்ள வட்ட எழுத்துமுறை உள்ள கம்போசிய பண்டைய கல்வெட்டு ஒன்றை உற்று நோக்கினால் ”பல்லவ” எனும் சொல்லை இனம் காண முடிகிறது.




சியம்ரீப் சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் கம்போடிய கலைப்பொருளான இக்கல்வெட்டில், “பல்லவ” எனும் சொல் கூட்டெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது
இப்பேரரசின் ஆட்சிக் காலத்தில் இந்தியச் சமய ஒழுங்கு பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனீசியா வரை விரிந்து பரவுகிறது. பின்னால் பௌளத்தம் வளர்ச்சியுற்று கிழக்கே பரவும் போது இந்தியப் பண்பாடு என்பது அடுத்த கட்ட நீட்சியாக வியட்நாம், சீனா, கொரியா, ஜப்பான் வரை செல்கிறது. காஞ்சியைச் சேர்ந்த தருமபுத்திரன் எனும் அரசிளங்குமரன் புத்த துறவியாகி பயணப்படும் கால் “தியானம்” எனும் மார்க்கம் “ஜென்” என்று பெயர் மாற்றம் பெற்று ஜப்பான் வரை நிலைப்படுகிறது என்பதை ஆய்வுகள் சுட்டுகின்றன. இவ்வரசனை “தாருமா” என்ற பெயரில் இன்றளவும் ஜப்பானியக் கோயில்களில் வழிபடுகின்றனர் [4]. இதன் தாக்கமாகவே, கொரிய எழுத்துமுறை என்பது தமிழ் நெடுங்கணக்கை ஒத்து அமைத்துள்ளதைப் பார்க்கமுடிகிறது [5]. இப்படிக் கிழக்கே பரவியது போலவே மேற்கேயும் தமிழ்ப் பண்பாடு பரவி இருந்ததை பண்டைய உலகின் அரும்பொருட்கள் சுட்டுகின்றன. பின்னால், கிறிஸ்தவம், இஸ்லாம் எனும் சமயப் போக்குகள் வளர்ச்சியுறும் தருவாயிலும் வைணவ, சைவத் தாக்கம் அச்சமயங்களில் உள்ளன என்றும் சில அறிஞர்கள் சுட்டுகின்றனர். குறிப்பாக ஜோசப் கேம்பல் எனும் அமெரிக்க அறிஞர் வைணவத்திற்கும், பௌளத்த தர்மத்திற்கும், கிறிஸ்தவ நெறிக்குமுள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறார் [6]. இவையெல்லாம் மிகப்பழமையான பண்பாட்டு நீட்சிகள். ஆயின் பிறிதொரு அலையாக ஆங்கில காலனித்துவ ஆட்சி காலத்தில் தமிழர்கள் தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளுக்குக் குடிபெயரும் போது தங்கள் சமயக் கொள்கைகளைக் கூடவே எடுத்துச் செல்கின்றனர். இருபதாம் நூற்றாண்டில் கணிசமான இடப்பெயர்வு ஐரோப்பா, அமெரிக்கா, கேனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு முதலில் கல்வி நிமித்தமும், பின்னால் அரசியல் காரணங்களுக்காகவும் தமிழ்நாடு, இலங்கையிலிருந்து நடைபெறுகிறது. இச்சமயத்திலும் தமிழ்ச் சமய ஒழுங்குகள் இந்நாடுகளுக்குள் பிரவேசிக்கின்றன.
இந்த ஒவ்வொரு அலையும் அக்காலக் கட்டத்தில் தமிழகத்தில் மடை மாற்றம் பெற்று வளர்ந்த பக்தி நெறியை உலகெங்கும் இட்டுச் சென்றிருக்கிறது [7]. இதற்கான தடயங்கள் இப்பல்வேறு நாடுகளில் கட்டப்பெற்ற இந்துக் கோயில்களிலும், மக்கள் வாழ்வியலிலும் ஒரு “காலப்பெட்டகம்” போல் உறை நிலையில் காணக்கிடைக்கின்றன. இதைப் புரிந்து கொள்வதற்கு முன் பக்தி இயக்கம் தோன்றிய வளர்ந்த வரலாற்றைச் சுருக்கமாகவும், அது தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் புரிந்து கொள்வது அவசியம்.
பக்தியின் தோற்றம்:வேதம் இந்திய மண்ணில் தோற்றம் பெற்று, ஒரு சமய நெறியாக வளர்ச்சியுற்ற காலத்தைக் கணிப்பது கடினம். இந்நெறி இந்தியா முழுவதும் தொன்று தொட்டு இருந்து வந்ததை தமிழின் மிகத்தொன்மையான தொல்காப்பியச் செய்யுள் சுட்டுகிறது [8]:
மாயோன் மேய காடுறை உலகமும்சேயோன் மேய மைவரை உலகமும்வேந்தன் மேய தீம்புனல் உலகமும்வருணன் மேய பெருமணல் உலகமும்முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
தமிழ் முனிவராகிய அகத்தியரின் மாணாக்கர் என்று அறியப்படும் தொல்காப்பியர் இங்கு வேத நெறித் தெய்வங்களை ஐந்திணைக் கடவுளாராகச் சுட்டுவதிலிருந்து, இவர் காலத்திற்கும் முற்பட்ட காலத்திலேயே வேத நெறி தமிழ் மக்களால் விரும்பி மேற்கொள்ளப்பட்டது என்பது நன்கு விளங்கும். மேலும், சங்க நூல்களுள் ஒன்றான பரிபாடல் [8], திருமால் பற்றிய குறிப்பாக,
அறத்தினு ளன்புநீ மறத்தினுள் மைந்துநீவேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
என்று தெளிவாகவே இதைச் செப்புகிறது. வேத நெறி வாக்கியங்கள் இமாலய அடிவாரத்தில் வாழ்ந்து முக்தி பெற்ற அருட்செல்வர்களால் அருளப்பெற்று அவை வடமொழியில் எழுதப்பட்டு வழக்கில் வந்தன என்பது ஒரு பொதுவான புரிதல். ஆயினும், இந்திய முழுமைக்கும் பொதுவாக உள்ள வேத நெறியில் பக்தி பற்றிய தெளிவான கோட்பாடுகள் இடம் பெறவில்லை. பின்னால் உபநிடதங்கள் தோன்றுகின்ற காலக்கட்டத்திலேயே பக்தி பற்றிய சரியான புரிதல் பொதுமக்கள் பார்வைக்கு வருகிறது. உபநிடதங்களின் அங்கமாகப் பார்க்கப்படும் பகவத்கீதையிலும், பாகவதத்திலும் பக்தி பற்றிய தெளிவான விளக்கம் கிடைக்கப்பெறுகிறது. பாகவத்திலுள்ள ஒரு செய்யுட்பா தெளிவாக “பக்தி எனும் நங்கை தென் திராவிட நாட்டில் தோன்றி, கர்நாடக, குஜராத் மாநிலங்கள் வழியாகப் பயணப்பட்டு, வங்காள மண்ணில் முதுமையுருகிறாள்” என்று சொல்கிறது [7]. இப்படிப் பக்தி செய்து பண்படுத்தும் பெரியோர்களைப் “பகவர்” என்று பண்டைத்தமிழ் நூல்கள் சாற்றுகின்றன. உதாரணமாக, ‘குடமூக்கிற் பகவர்’ ‘நிலாத்துக் குறிப் பகவர்’ என்றெல்லாம் இவர்கள் அன்று அழைக்கப்பட்டனர் [8]. கலித்தொகையில், ‘முக்கோற் பகவரை வினாதல்’ என்ற துறையில், தலைவி, தலைவனுடன் வேற்றூர் செல்ல, அவளைத் தேடிப் பின் தொடரும் செவிலி, வழியில் கண்ட முக்கோல் பகவரைக் கண்டு, ‘தன் மகளையும், அவளுடன் செல்லும் தலைமகனையும் கண்டீரோ?’ என வினவுதலும், அதற்குரிய மறுமொழியையும் காணலாம் [9]. இதனால் பக்தி நெறிச் செல்வர்கள் சங்க காலத்தும் அதற்கு முன்னரும் தமிழ்ப் பெருமக்களால் பெரிதும் போற்றப்பட்டனர் என்பது தெளிவாகிறது.
உந்நத காதல் பக்தியாக செம்மையுறுதல்பக்தி என்பது காதலின் உச்சக்கட்டம் என்பதை மணிமேகலை, ‘சமயக் கணக்கர் தந் திறங்கேட்ட காதை’ வழி அறியலாம் [10],
“காதல் கொண்டு கடல்வண்ணன் புராணமோதினான் நாரணன் காப்பென்றுரைத்தனன்”
இப்படிப் பக்தியின் தோற்றுவாய் சங்கத்தில் மிளிர்ந்தாலும், சங்கம் என்பது அகம், புறம் என்றே பொதுவாக அறியப்படுகிறது. இப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஏ.கே.இராமானுஜனனும், இதை “Poems of Love and War” என்றே மொழி பெயர்க்கிறார் [11]. தமிழ் இலக்கியத்தையும், சமிஸ்கிருத இலக்கியத்தையும் ஒப்பு நோக்கினால் தமிழ் இலக்கியத்தில் தனிச்சிறப்போடு இருப்பது அகத்திணை மரபாகும். சுருங்கச் சொல்லுவதானால் "அக மரபு என்பது மனித உறவுகளின் உன்னதத்தை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்". அது காதலனைப் பிரிந்து காதலி பசலை கொண்ட செய்தியாக இருக்கலாம் அல்லது தன் அன்புக்குரிய குறுநில மன்னன் இறந்து வருந்தும் பாணனின் பாடலாக இருக்கலாம். இந்த இலக்கிய மரபைப்பற்றி ஆரிய மன்னன் ஒருவனுக்கு தமிழ் புலவர் ஒருவர் சொல்லுவதாக ஒரு சங்கப்பாடல் வருகிறது.
உதாரணமாக, குறுநில மன்னன் ஒருவன் இறந்து விடுகிறான். அவனது சபையில் வந்து பாடி, பொருள் பெற்று, அவன்பால் பெரிதும் அன்பு கொண்டிருந்த பாணனால் (குடவாயிற் தீரத்தனார்) அத்துயரைத்தாங்கிக் கொள்ளமுடியவில்லை. புலம்புகிறான்-மல்லிகைச் செடியைப் பார்த்து! தலைவன் இறந்து விட்டான் இனி பெண்கள் வளையல் அணிய மாட்டார், மல்லிகை கொய்து பூச்சூடமாட்டர் எனவே மல்லிகையே இனி நீ பூத்து என்ன பயன்? என்று வருகிறது அப்பாடல்.
இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார்நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்பாணன் சூடான் ; பாடினி அணியாள்ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்தவல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றைமுல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே? இப்படி அதீத காதல் கொள்வது, உணர்ச்சி வசப்படுவது தமிழக மரபு. சங்கத்திற்குப் பிறகு களப்பிரர் ஆண்ட இருண்ட காலத்தில் இம்மரபு மறைந்து விடுகிறது. எழுநூறு ஆண்டுகளுக்குப் பின் இம்மரபை உயிர்ப்பிக்கின்றார் இறையனார் தமது “களவியல்” நூலின் மூலம். அதுவரை அகமரபு என்பது குகையிடை வளர் சுடரே போல், குன்றத்திலிட்ட விளக்கே போல் குறிப்பிட்ட சிலரிடமே வாழையடி, வாழையாக மதித்து, போற்றப்பட்டு வருகிறது. ஆயினும் இறையனார் களவியல் தோன்றிய காலக்கட்டத்திலும், அதற்கு சற்று முன்பும் இருந்த தமிழக சூழல் சங்க காலத் தமிழகச் சூழலிலிருந்து பெரிதும் மாறுபட்டு இருந்திருக்க வேண்டும். எனவே அக்காலக்கட்டத்திற்கு ஏற்ற வகையில் அகத்திணை மரபு புத்துயிர் பெறுகிறது. குறுநில மன்னன் இருந்த இலக்கிய பீடமான ‘பாட்டுடைத் தலைவன்’ இப்போது இடம் மாறி இறையவர்க்கு வந்துவிடுகிறது. ஆகம நெறி செழித்து, கோயில் வழிபாடு என்பது வாழ்வியல் நெறியாகியபோது, கோ + இல் என்று அரசனைச் சுட்டிய விளிச்சொல் இப்போது இறைவனின் இல்லமாகிவிடும் மடை மாற்றம் நிகழ்ந்துவிடுகிறது.
பக்தி இலக்கியமும் படைப்புச் சுதந்திரமும்:இது தமிழ் இலக்கியவாதிக்கு ஒரு புது சுதந்திரத்தை வழங்குகிறது! படைப்பிற்கு அடிப்படையான தேவை சுதந்திரம். முழு சுதந்திரமில்லாமல் படைப்பு நிகழாது.சுதந்திரம் என்பது வெறும் அரசியல் சுதந்திரமற்றுமன்று, உள சுதந்திரமுமாகும். உள்ளத்தில் எந்தத் தடையுமில்லாமல் பறவை போல் பறந்து திரியும் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த அகச் சுதந்திரம், புறச் சுதந்திரத்தை சார்ந்ததுதான். இதைத் தமிழ் படைப்பிலக்கியவாதிகள் மாறும் சூழலுக்கேற்றவாறு மடை மாற்று உத்தியாகப் பயன்படுத்தினர். அதனால்தான், வெறும் குழு/இனத் தலைவனைப் பாடிக் கொண்டிருந்த வழக்கத்தை மாற்றி இறை பொருளை மாற்றாக வைத்தனர்.
குழுத்தலைவன் சமூக காரணங்களால் கட்டுப்பட்டவன். முழு சுதந்திரம் இல்லாதவன். சுதந்திரமில்லாத ஒன்றை மூலமாக வைத்து இலக்கியம் படைப்பது சாத்தியமில்லை. மேலும், அரசன் அரசியல் காரணி. அரசியலோ தனி மனித அகங்காரத்தை அடிப்படையாக் கொண்டது. அகங்காரமோ இயற்பியல் உண்மையற்ற (physical reality) மனத்தின் வெளிப்பாடு. அகங்காரமும், அரசியலும் அடிப்படையில் ஊழலை வளர்ப்பவை. இப்படி எந்த வகையிலும் புனிதமில்லாத ஒன்றை பாடு பொருளாக வைத்து கவி சமைப்பதை நிறுத்தி, ஆக்கத்தின் மூலகாரணியான சுதந்திரப் பொருளான இறைவனை முன் வைத்து கவி சமைக்கத் தொடங்கினர் தமிழ் இலக்கியவாதிகள். அரசனைப்பாடிய புலவர்கள் இறைவனைப் பாட தலைப்படுகின்றனர்.
படைப்பிலக்கியத்தின் தோற்றுவாய்க்கும், சமய உணர்விற்கும் அடிப்படைத் தொடர்பு இருக்கிறது. இலக்கியம் மனதில் தோன்றும் பொழுதுகள் புனிதமானவை. கொஞ்சமேனும் மன ஒழுக்கமும், அழகுணர்ச்சியும் இல்லாதவர்களால் சாகா இலக்கியம் படைக்க முடியாது. இது சரித்திரம் காட்டும் உண்மை. இதை மற்ற ஆக்கங்களுக்கும் பொது என்று சொல்லாம். 9வது சிம்பொனியை எழுதும் போது பீத்தோவனுக்கு பார்வையும், கேட்கும் திறனும் போய்விட்டது. இருந்தாலும் அவனால் உன்னத இசையை உலகிற்கு அளிக்க முடிந்தது.
ஆக்கத்தின் தோற்றுவாய் மிக, மிக பூடகமானதும், ஆச்சர்யம் நிரம்பியதும் ஆகும். இது கலைக்கு மட்டும் பொதுவன்று. அறிவியலுக்கும் இது பொருந்தும். ஆனால் அறிவியலில் இதைப் பற்றி பேசுவது மூட நம்பிக்கை என கருதப்படுவதால் இதைப் பற்றிய ஐதீகங்கள் அங்கு உருவாகவில்லை. இருப்பினும், பென்ஜீன் (benzene molecule) மூலக்கூறின் வடிவத்தை, ஒரு கனவில்தான் ஹெக்கூல் கண்டான். குவாண்டம் இயற்பியல் சூத்திரங்களை உலகிற்கு விளக்க முற்பட்ட விஞ்ஞானிகள் அது "விளக்கத்திற்கு" உட்படாத மாயமாக இருப்பதை உணர்ந்துதான், கிழக்கிந்திய மெய்யியல் உண்மைகளுடன் அவைகளை ஒப்பு நோக்கினர்.
உதாரணமாக, ஒளியின் அடிப்படை அலகான ஒளிச்சான் (photon), பார்ப்பவரின் இருப்பைப் பொறுத்து தோன்றும். அதாவது பார்ப்பவர் இல்லாமல் பார்க்கப்படுவது இல்லை. எனவே ஒளிச்சானின் உண்மையான இருப்பை யாராலும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. அது இருக்கிறது அதே சமயத்தில் அது இல்லை எனும் நிலை! இந்த நிச்சயமின்மை அறிவியலுக்கு புதிது. அதனால்தான் ஐன்ஸ்டைன் கூட குவாண்டம் இயற்பியலை கிண்டல் செய்யும் விதத்தில் "கடவுள் பகடை ஆடுவதில்லை" என்று சொன்னார். ஆனால் நம்மாழ்வார் என்ற தமிழ் கவி குவாண்டம் விஞ்ஞானிகளுடன் ஒத்துப் போகிறார்:
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்உளனலன் எனில், அவன் அருவமிவ்வருவுகள்உளனென இலனென இவை குண முடைமையில்உளன் இரு தகைமையொ டொழிவிலன் பரந்தே [12]
ஆக படைப்பிலக்கியதின் தோற்றுவாய் விளக்கத்திற்கு பிடிபடாத பூடகமான ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் அந்தக்கால கவிகள் இப்பூடகத்தை இறை உணர்வுடன் பார்த்து கவி சமைத்தனர். உதாரணமாக, நம்மாழ்வார் இத்தோற்றுவாயை இறைவன் என்றே சொல்கிறார். அதாவது கவி வேறு, இறைவன் வேறல்ல, அவனே தமிழ்க் கவிதையாய் வந்து தன் நெஞ்சும், உயிரும் உட்கொண்டான் என்கிறார்.
செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட் செய்மின்; திருமாலிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக்கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியாவண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவையுண்டு தானேயாகி நிறைந்தானே [13]
மேலும், அக மரபின் தொடர்ச்சியாக "பக்தி மரபு" தமிழகத்தில் அறிமுகமாகிறது. பக்தி என்பது காதலின் ஓர் உன்னத வெளிப்பாடு. காதல் உணர்வு மனிதனை தளிர்ப்பிக்கும் உணர்வு. காதல் கொண்ட மக்களின் முகத்தைப்பார்த்தாலே ஒரு "பொலிவு" தெரியும். இந்தக் காதல் உணர்வை நிரந்தரமாக்கும் முயற்சிதான் பக்தி. நிரந்தரமில்லாத மனிதர்களிடம் வைக்கும் காதலை விட எப்போதும் இருக்கும் இறைவனிடம் வைக்கும் காதல் நிரந்தரமாக இருக்கிறது. அதாவது ஒருவன் சாகும் வரை காதல் செய்யலாம். இக்காதல் கவிதைகள்தான் பக்தி இலக்கியம்.
இச்சாவாக் காதல் நிலையை ஆண்டாள் அழகாகச் செப்புகிறாள்,
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் உன்றன்னோடுற்றோமே யாவோம்; உனக்கே நா மாட்செய்வோம் [14]
இப்பிறவி என்று மட்டுமில்லை, இனிவரும் பிறவிகளிலும் உன்னோடு ஒற்றி, உனக்கே ஆட் செய்வோம் என்று சொல்லி, இந்த உறவு என்பது ஒழிக்க ஒழியாதது என்றும் சொல்கிறாள்
குறையொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடுஉறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது [15]
மனிதர்கள் குறையுடையவர்கள். ஆயின் இறைவன் பூரண குணமுடையவன், அவனுடன் உறவு கொள்ளும் போது குறையான பொருளும் நிறை கொள்கிறது. இதனையேதான் ஆண்டாளின் சரித்திரம் நமக்குச் செப்புகிறது.
அதே நேரத்தில், காதல் எனும் உறவு வரப்பெற்றவர்களின் அழகியல் மெருகேறுகிறது. பார்க்கும் இடத்திலெல்லாம் தன் தலைவனைக் கண்டு, பார்க்கும் பொருளுடன் ஓர் உறவு கொள்ளும் தன்மையும் வந்துவிடுகிறது. காட்டில் வாழும் குயில், மயில், கருவிளை, கனிகள், மலர்கள் இவை ஜீவனுற்று காதலியுடன் நேசம் பாராட்டத்தொடங்குகின்றன. காதலியும் அவைகளுடன் உரையாடத் தொடங்குகிறாள். உதாரணமாக ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழிப் பாடலைப் [16] பாருங்கள்,
பைம்பொழில் வாழ்குயில்காள்! மயில்காள்! ஒண் கருவிளைகாள்!வம்பக் களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்!ஐம்பெரும் பாதகர்காள்! அணிமாலிருஞ் சோலைநின்ற,எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே ?
இது முழுமையான அகப்பாடல். அகத்திணையில் இயற்கை எனும் பாடுபொருள் காதலியின் மனோநிலையைச் சுட்ட வருவது. அவ்வருணனை சில இடங்களில் பூடகமான சேதிகளைச் சொல்வதுமுண்டு. உதாரணமாக ஐங்குறுநூறுப் பாடலில் வரும் இயற்கை வருணனை சொல்லும் சேதி என்ன?
அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்தேன்மயங்கு பாலினு மினிய வவர் நாட்டுவலைக் கூவற் கீழமானுண் டெஞ்சிய கலிழி நீரே! [11] இங்கு தலைவனுடன் கூடி முயங்கிய சேதியைக் கூறுமுகமாய் தலைவி தன் தோழிக்கு தழை மூடிய கலங்கிய நீரில் மான் உண்டு எஞ்சிய கலிழி நீரைச் சுட்டுகிறாள். அந்நீரின் சுவை வீட்டில் கொடுக்கப்படும் இனிய தேன் கலந்த பாலை விடச் சுவையானது என்பதாகும். இதே வழியில் பக்தி இலக்கியமும் அஃறிணைப் பொருள்களுக்கு ஒரு அமரத்தன்மை கொடுத்து அவைகளைப் பாடுபொருளாக்கி உள்ளக்கிடக்கையை வெளியிடும் குறியீடாக பயன்படுத்துகிறது. இந்த உத்தியை ஆண்டாள் கையாண்டு, கடல் நீரை நோக்கி விளிக்கும் பாடல் சுவையானது,
கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்குறுத்துஉடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு, என்னையும்உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்கு என்நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே [17] இப்பாடலில் மிகத்தெளிவாக காதலியின் உள்ளக்கிடக்கை வெளிப்படுகிறது.
சங்கப்பாடலில் தலைவி காட்டும் அதே துணிவு “சங்கத்தமிழ் மாலை” என்று கூறப்படும் நாச்சியார் பாடகளிலும் காணக்கிடைக்கிறது,
அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் அவன்முகத் தன்றி விழியேனென்று,செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச் சிறுமா னிடவரைக் காணில்நாணும்,கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா,இங்குத்தை வாழ்வை யொழியவேபோய் யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின் [18] இப்பாடல் 21ம் நூற்றாண்டு புரட்சிப் பெண் கவிஞர்கள் சொல்லப்புகும் “eve teasing” எனும் கருப்பொருளை 8ம் நூற்றாண்டுப் பெண் பிள்ளையால் சொல்ல வைக்கிறது பக்தி இலக்கியம். “செங்கச்சுக் கொண்டு கண்ணாடையார்த்துச் சிறுமானிடவரைக் காணில் நாணும்” எனும் வரிகள் தெளிவாக இதைச் சுட்டுகின்றன. கோவிந்தனுக்கல்லால் அவள் கொங்கை மற்றவர்க்கு இல்லை என்கிறாள் ஆண்டாள். ஆயின் இந்தச் சிறு மானிடரோ அவளது கொங்கையையே பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். என்ன செய்வது என்று கேட்கிறாள் ஆண்டாள்? இப்படிப்பட்ட சிறுமானிடர்க்கு தன்னை மணம் முடிக்கத் துணியும் எந்தப் பேச்சுப்படினும் “வாழகில்லேன்” என்று பிறிதொரு பாடலில் சொல்லிவிடுகிறாள்.
உண்மையான காதலிலிருந்துதான் கற்பு என்ற கருப்பொருள் தமிழுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஒருவரையொருவர் இதய பூர்வமாக காதலிக்கும் போது, மற்றவர் இடையில் புகுந்து உரிமை கொண்டாடுவதை காதல் எப்போதும் அனுமதிப்பதில்லை. எனவே தனது, உடல், உயிர் எல்லாம் தனது காதலனுக்கு/காதலிக்கு என்று இருக்கும் நிலையே கற்பாகும். காதல் போயின், காதல் போயின்...கற்பும் போய் விடுகிறது! காதலே இல்லாமல் பெண்ணை ஒரு உடமையாக வைத்திருக்கும் தமிழகம் கற்பை மட்டும் ஒரு பாதுகாப்பு கவசமாக உபயோகித்து வருகிறது. உடமைக்கு கற்பு உண்டோ? இல்லை என்று திண்ணமாக சொல்கிறாள் ஆண்டாள். காதலுக்குத்தான் கற்பு உண்டு என்பது ஆண்டாளின் துணிபு. இப்படிப் பட்ட அருமையான எண்ணங்களை, நம் உண்மையான மரபை பக்தி இலக்கியம் இன்றளவும் காத்து வைத்திருக்கிறது. இவைகள் கோயிலில் வைத்து வாசிக்கப் படுவதுதான் தமிழின் பெருஞ் சிறப்பு. காதலும், தெய்வமும் ஒன்று. காதலும் பக்தியும் ஒன்று என்று உலகிற்கு பறை சாற்றும் உன்னத மரபு தமிழ் பக்தி மரபு.
இக்காதல் உறுதிப்படும் போது மற்றவரை நினைக்கும் மனம் வாராது போகிறது. அதை இப்படிச் சொல்கிறார் நம்மாழ்வார்:
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்துஎன்னானை என்னப்பன் எம்பெருமானுளனாகவே! [19]
இப்பாடலில் இருந்து காதல் வயப்பட்டவர் கற்பு நெறியோடு இருப்பர் என்பது தெரிகிறது. இதை ‘மறந்தும் புறம் தொழா’ தன்மை என்று சொல்வர். மற்றொன்று, சங்க காலத்தின் வேண்டிப் பாணர் மன்னர் புகழ் பாடும் தன்மை முழுக்க ஒழிந்து போய் “எந் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்” எனும் சுதந்திரம் கவிஞர்களுக்கு தலைப்படுதல் முக்கிய மாற்றமாகும்.
எனவே பக்தி எனும் உணர்வு, மனிதனுக்கு வாழ ஆசையை உருவாக்குகிறது, வாழும் போது பிற உயிர்களிடத்து அன்பும், நேயமும் கொள்ளச் செய்கிறது, வாழும் காலங்களில் துணிவும், அஞ்சா நெஞ்சமும் அருள்கிறது.
பக்தி இலக்கியமும் சமுதாயச் சீரமைப்பும்:
இப்புதிய யுத்தியை வைத்து இவர்களால் சமூக கொடுமைகளைச் சாட முடிகிறது. துணிந்து திருநாவுக்கரசரால் "யாமார்க்கும் குடியல்லோம்" என்றும்; திருமூலரால், "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்றும் சொல்ல முடிகிறது. இதை ஒரு சமூக இயக்கமாக ஆழ்வார்கள் வளர்த்திருப்பதற்கான அகச்சான்றுகள் கிடைக்கின்றன. உதாரணம், திருப்பாணாழ்வாரின் அகத்தூய்மையை உணராத ஜாதி இந்துக்கள் அவரை துன்புறுத்துகின்றனர், இது கண்டு பொறுக்காத தொண்டரடிப்பொடியாழ்வார் எனும் அந்தணர் இப்படிப் பாடுகிறார்:
பழுதிலா வொழுகலாற்றுப் பலசதுப் பேதிமார்கள்இழி குலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்தோழுமின், கொடுமின், கொள்மின்! என்று நின்னொடு மொக்கவழிபட வருளினாய் போன்ம் மதிள் திருவரங்கத்தானே!அமரவோ ரங்கமாறும் வேதமோர் நான்கு மோதிதமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும்நுமர்களை பழிப்பாராகில் நொடிப்ப தோரளவில் ஆங்கேஅவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமாநகருளானே! [20]
எப்படி விழுகிறது பாருங்கள் வார்த்தைகள். இது சாத்வீக மொழி அல்ல. தலித்துகளின் போராட்ட மொழி! சொல்பவர் யார்? தலித் அல்ல, அந்தணர். ஏன்? எம் அடியார்கள் என்ற மனித நேயம்! இவர்கள் தெய்வம் என்ற கருப்பொருளை வைத்து ஒரு சம தர்ம சமூதாயத்தை உருவாக்கப் பார்த்தனர். அதே கருப்பொருளை வைத்து பெண் அடிமைத் தளையையும் எதிர்த்தனர்:
வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவிகானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்பஊனிடை யாழி சங்குத்தமற்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்மானிட வரக்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய், மன்மதனே! [21]
உதாரணமாக இப்பாடலில் தாம் விரும்பும் காதலரை அடையும் உரிமை பெண்ணிற்கு வேண்டும் என்பது தெளிவாகக் காட்டப்படுகிறது. மேலும் ஆண்டாள் உயர் குலத்துப் பெண் பிள்ளை. ஆயின் அவள் மனம் கவர்ந்த கள்வனோ இடைப்பையன். இருந்தாலும் காதல் உன்னதமானது என்பதும், அவள் காதலன் உயர் குணங்கள் உடையவன் என்பதாலும். வானவர்க்கு என்று வேள்வியில் வைக்கப்பட்டிருக்கும் படையலை ஈன நரிகள் வந்து உண்ணுவது சாலுமோ? என்று உவமை காட்டிப் பேசுகிறாள் கோதை. இப்படித் துணிந்து சமூகக் கருத்துக்களைச் சொல்ல கடவுள் பக்தி என்ற யுத்தி பயன்படுத்தப் படுகிறது.
மேலும் சமூகக் காரணங்களால் பிளவுற்று இருக்கும் தமிழ்ச் சமுதாயத்தை பக்தி எனும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியும் தமிழகத்தில் நடந்திருக்கிறது.
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனைநலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்று உள்கலந்தார், அடியார் தம் அடியாரெம் அடியார்களே! [22]
இன்று தலித் என்று அறியப்படும் குலந்தாங்கு சாதிகள் அனைத்திலும் கீழிழிந்து எத்துணை நலமும் இல்லாத மனிதர்களையும் பக்தி இயக்கம் ஒருங்கிணைக்கப் பார்த்திருக்கிறது.
அடிமையிற் குடிமையில்லா அயல் சதிப் பேதிமாரில்குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற் கன்பு சேய்யும்அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகருளானே! [23]
என்று துணிந்து ஒரு சாதி அந்தணரைச் சொல்ல வைத்திருக்கிறது பக்தி இயக்கம். மேலும் விப்ரநாராயணர் என்ற இயற்பெயருடைய தொண்டரடிப்பொடி, இம்மக்களோடு திருமண ‘கொடுக்கல் வாங்கல்’ கொள்ள வேண்டுமென்றும் திருமாலையில் சொல்கிறார். இதை “தோழுமின், கொடுமின், கொள்மின்!” எனும் வரிகள் செப்பும்.
முடியினில் துளபம் (துளசி) கொண்ட திருமாலுக்கு அன்பு செய்யும் அடியவர் எல்லோருக்கும் பக்தியால் என்ன, என்ன கிடைக்குமென்று திருமங்கை ஆழ்வார் பட்டியல் [24] இடுகிறார். குலந்தரும்; செல்வந் தந்திடும் அடியார் படுதுயராவின வெல்லாம்நிலந்தரஞ் செய்யும்; நீள்விசும் பருளும் அருளொடு பெருநில மளிக்கும்வலந்தரும்; மற்றுந் தந்திடும்; பெற்ற தாயினுமாயின செய்யும்நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்
முதலில் அவர் சொல்வதே, குலந்தாங்கு சாதிகள் அனைத்திலும் கீழிழிந்துள்ள மக்களுக்கு நல்ல “குலம்” தரும் என்பது. அவர்கள் சமூக அந்தஸ்து பெருவர். சமூகத்தால் மதிக்கப்படுவர் என்பது. அப்படிநிலை உயர்வால் அவர்கள் செல்வமும் பெருவர். செல்வம் வந்திட அவர்கள் கொண்ட துயர்கள் நீங்கும். துன்பம் நீங்கியதால் நீண்ட நாள் வாழ்வர் என்பதே, ‘பெற்றதாயினுமாயின செய்யும்” மருந்து என்று ஆழ்வார் சொல்கிறார். இதைச் செயல் பாட்டில் கொண்டு வந்த இராமானுசமுனி ‘தலித்’ மக்களை “திருக்குலத்தோர்” என்று அழைத்தார். இச்சிறப்பு குறித்து சமய ஒழுங்குகளில் தீவிர முரண்பாடு கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் கூட இராமானுசரை தன் இன்கவியால் சிறப்பித்தார். அது,
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்இராமானுசனை ஈன்றதன்றோ?......[25]
என்பது.
பக்தி இலக்கியமும் செந்தமிழ் வளர்ச்சியும்
தமிழ் இன்று உயர்தனிச் செம்மொழி என்று இந்திய அரசால் அங்கீகாரம் பெறுவதற்கான உரிமைக்குரல் இன்று நேற்று எழுந்தது அல்ல. அது சங்கம் தொட்டு கேட்கும் குரல். சங்கத்தின் தொடர்ச்சியாய் வரும் பக்தி இலக்கியத்தில் இக்குரலைத் தெளிவாய் கேட்கலாம்.
கதவு மனம் என்றும் காணலாம் என்றும்குதையும் வினையாவி தீர்ந்தேன் விதையாகநற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய்கற்ற மொழியாகிக் கலந்து [26]
ஆழ்வார்கள் தமிழை எவ்வளவு உயர் நிலையில் வைத்து பார்க்கிறார்கள் என்பதற்கு விளக்கமாய் அமைகிறது இப்பாசுரம். இவ்வுலகிற்கும் உடலிற்கும் கதவாக மனது செயல்படுகிறது. மனது சொல்லித்தான் உலகில் எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன. மனசில்லாமல் செய்யும் காரியும் உருப்படுவதில்லை. அதே நேரத்தில் மனது சொல்லும் எல்லாவற்றையும் செயல் படுத்தவும் முடிவதில்லை. அப்படியே மனது போனபடி செயல் பட்டாலும் செயலின் விளைவுகள் எப்போதும் நன்மையாய் முடிவதில்லை. எனவே மனதை அறிந்து கொள்ளுதல் ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய படி. மனது நிலைப்பட்டு, தான்தோன்றித்தனமாக ஓடாமல், தன்னை தான் அறிந்து, தன் எல்லை அறிந்து நின்று விடுவது முதல்படி. அப்போது பிரபஞ்சம் அது, அது, உள்ளபடி கண்ணுக்குத்தெரியும். மனதின் வர்ணப்பூச்சு எதுவுமில்லாமல் உலகம் தெளிவாய் தெரியும் போது அதன் உள்ளுள் உறையும் உறவுகளும் சரியாய் புரியும். பிரபஞ்சம் முழுவதையும் இணைக்கும் ஒரு தொப்புள் கொடி கண்ணில் படும். இதை இறை அனுபவம் என்றுதான் சொல்லவேண்டும். இதை திருமால் திருமழிசை ஆழ்வாருக்கு அருளுகிறார். எப்படி? தமிழ் என்ற மொழி மூலம்! கற்றமொழியாக இவர் ஊனுடனும் உயிரிடனும் கலந்து, இவர் உள்ளத்தை விளை நிலமாக்கி இறைமையை சாகுபடி செய்கிறார். தமிழின் பயனை இதற்கு மேலும் சொல்லமுடியுமா என்ன? இந்த ஒரு பாடலை ஆரம்பமாக வைத்துத்தான் ஆழ்வார்கள் தமிழ் (திராவிட) வேதத்தை படைக்கின்றனர் என்று ஊகிக்கலாம். வேதம் [மெய்ஞானம்] சொல்லப்படும் மொழி உயர் தனிச் செம்மொழியாக இருக்க வேண்டும். ஆழ்வார்கள் தமிழால் அது முடியும் என்று செய்து காட்டினர். வேதத்தின் சாரமாக மட்டுமில்லை, வேத உபநிஷத்துக்களுக்கும் விளக்கம் தேடி பாசுரங்களுக்கு வரும் நிலையை உருவாக்கினர். இதை நான்கு வேதங்களிலும், பிற கலைகளிலும் தேர்ச்சி பெற்று, “சர்வ தந்திரச் சுதந்திரன்” என்று பெயர் பெற்ற வேதாந்த தேசிகன் என்ற ஞானி பின்வருமாறு கூறுகிறார் [27]:
செய்யதமிழ் மாலைகள்நாம் தெளிய ஓதித்தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே!
[தேசிகப்பிரபந்தம். அதிகாரசங்கிரஹம்]
இதையே கம்பன் பின்வருமாறு கூறுகிறான் [27],
“எங்கள் அந்தணர்க்குத் திருவாய்மொழி செப்பலுற்றால் மாமறையுள் அயிர்ந்த பொருள் வெளியாம்”.
திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களும் ஆயிரம் வேதமென்றும் கூறுவர், இதை தத்துவராய சுவாமிகள் பின்வருமாறு புகல்வர் [27]:
தீந்தமிழென் றொரு கோடி வேதமாகும்செய்யதிரு வாய்மொழிந்தார்
என்று. இப்படித் தமிழின் சிறப்பறிந்தமையால், தமிழையும், ஆரியத்தையும் இணைத்துப் பேசும் போது தமிழுக்கு உயர்வு கொடுத்து முதன்மைக் கருத்தாகச் சொல்வது வழக்கம் [28]:
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயிறாகி,அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்தமந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.
தமிழின் மந்திரத் திறத்தைச் சுட்டும் வண்ணம் "செந்திறத்த தமிழோசை" என்று சுட்டி, வழக்கமாக தேவபாஷை என்று வழங்கப் படும் சமிஸ்கிரதத்தை "வடசொல்" என்று சுருக்கி விடுகிறார் திருமங்கை ஆழ்வார். இதை வெறும் உயர்வு நவிற்சியாகச் சொல்லாமல், ஒரு மரபாக ஆக்கி வைத்தமையைக் கம்பன் பின்வரும் பாடலால் சுட்டுகிறான் [29].
வேதத்தின் முன்செல்க; மெய்யுணர்ந் தோர்விரிஞ் சன்முதலோர்கோதற்றஞானக் கொழுந்தின்முன் செல்க; குணங்கடந்தபோதக்கடல் எங்கள் தென்குரு கூர்ப்புனி தன்கவியோர்பாதத்தின் முன்செல்லுமே! தொல்லைமூலப் பரஞ்சுடரே!
இப்பாடலின் படி உற்சவ காலங்களில் தமிழ் மறைகள் ஓதியவண்ணம் அடியார் முன் செல்ல, தமிழால் ஈர்க்கப்பட்டு இறைவன் தமிழின் பின் செல்ல, இறைவன் பால் ஈர்க்கப்பட்ட வடமொழி (வேதம்) இறைவனைத் தொடர்ந்து பின் செல்லும் என்பதாகும்.
இச்சம்பிரதாயத்தின் அடியொட்டியே இன்றளவும் தமிழ்ப் பாசுரங்கள் திருமலை திருப்பதியிலும், பிற வட மாநிலங்களிலும், தாய்லாந்துக் கோயில்களிலும் ஓதப்படுகின்றன.
தமிழ் உயர் தனிச் செம்மொழி என்பது மட்டுமல்ல, அது தேவ பாஷை என இதுவரை அறியப்பட்ட வடமொழியினும் உயர்வானது என்பதை பக்தி இலக்கியம் நிரூபித்துள்ளது.
பக்தி இலக்கியப் போக்கு இயக்கமாதல்:சங்கம் தொட்டு பக்தி எனும் கருத்து தமிழ் மண்ணில் இருந்து வந்தாலும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோற்றத்திற்குப் பின் அது வீறுகொண்டு எழுந்தது என்பதை இன்று தமிழ் இலக்கியத்தின் முக்கிய அங்கமாகவும், எண்ணிக்கையால் கூடுதலாகவும் இருப்பதிலிருந்து அறிந்து கோள்ளலாம். ஒருவகையில் இவ்வெழுச்சி தமிழ்ப் பண்பாட்டின் மறுமலர்ச்சி என்றும் நோக்கலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான் [30]
என்பது தமிழ்க்குடியின் சமூக நோக்கு. ஆயின், களப்பிரர் காலம் தொட்டு ஒரு சமூகச் சீரழிவு தமிழ் மண்ணில் தோன்றியமையான் பக்தி இயக்கம் தோன்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. காலக்கணக்கில் வெவ்வேறு நூற்றாண்டுகளில் எழுத்தப்பட்டாலும் இச்செவ்விலக்கியங்கள் ஒன்றையே பேசின. இதை மிக அழகாக தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை31 செப்பும்,
பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது
இதுவொரு சூத்திரம் என்றும் கொள்ளலாம். ஒரு இயக்கமெனில், அதற்கொரு கொள்கை வேண்டும், அக்கொள்கை பரப்பு செயற்பாடு நடைபெறவேண்டும். இதையேதான் இவ்வரிகள் சொல்லுகின்றன். இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட ஒருவர் பேசிய மொழியையே பின் வரும் தொண்டர்களும் பேசுவர். அதில் பேதமிருக்காது என்பதை “பேசிற்றே பேசல் அல்லால்” எனும் வரிகள் சுட்டும். இப்படிப் பேதமின்றி எக்காலத்திலும் பேசுவதால் இவ்வியக்கியத்தின் பெருமை உணரப்படும் என்பதை அடுத்த வரி செப்பும். அப்படி இவர்கள் பேசிய கொள்கைகள் என்ன?
1. தமிழ் மொழி உயர்வானது. “வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை அருளிய சொல்” என்று சொல்லும் படியாக எம்மொழியில் சொல்லப்பட்டிருக்கும் உயர் கருத்துக்களையும் தமிழ் மொழியியால் சொல்ல முடியும் என்பது முதன்மையானது. இந்த உயர் உந்துதலால்தான், கம்பன் “இராமாயண காவியம்” செய்தான், வாதவூரார், “சிவபுராணம்” செய்தார், வில்லிபுத்தூரார் “மகாபாரதம் செய்தார்”, வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன், “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” எனத் திருமந்திரம் செய்தார் திருமூலர். இத்தாக்கம் அன்று தொடங்கி, “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று இருபதாம் நூற்றாண்டுப் பாரதிவரை தொடர்ந்து வருவதைக் காணலாம்.2. நற்கதி பெற காசி, இராமேச்வரமென அலைய வேண்டியதில்லை. இருக்கின்ற ஊரிலுள்ள இறைவனே இப்பேறுகளை அருள வல்லவன் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கும் வண்ணம் தமிழகத்திலுள்ள திருத்தலங்களுக்கெல்லாம் சென்று “பாடல்” (மங்களாசாசனம்) செய்வது.3. திருக்குலம் என்பது பிறப்பாலன்றி நல்லொழுக்கத்தால் வருவது என்பதைச் சுட்டிக்காட்டுவது.
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே [32]
என்பது சுருக்கம்.
4. இறைவன் என்பவன் உச்சாணிக்கொப்பில் உட்கார்ந்து கொண்டு அரசாட்சி செய்பனல்ல அவன் பக்தரின் ஒரு சொட்டுக் கண்ணீருக்காய் உடனே கீழிறங்கி வந்து, அவரின் துன்பத்தில் பங்கேற்பவன் என இறைமையை அருகில் கொண்டு வந்தது. இதைத் திருவாய் மொழி இப்படிச் செப்பும்:
நாட்டில் பிறந்தவர், நாரணற்காளன்றி யாவரோ,நாட்டில் பிறந்து, படாதனபட்டு மனிசர்க்கா நாட்டை நலியும் அரக்கரை, நாடித் தடிந்திட்டு,நாட்டையளித்து உய்யச் செய்து, நடந்தமை கேட்டுமே [33] “மானிடர்க்காக படாதன பட்டு அவதியுறும்” என்பது உள்ளத்தை நெகிழச்செய்வது.
5. பக்தி என்பது மிக அரிய பொருளல்ல, அது நாம் அன்றாட வாழ்வில் காண்கின்ற உறவிலிருந்து வேறுபட்டதல்ல என்பதைப் புரியவைத்தது.
இப்படி உயர்நெறி கொண்ட கருத்துக்களை ஒருவர் பின் ஒருவராக, வாழையடி வாழையெனும் வகையில் காலம் கடந்து, கொண்டு சென்றதால் பக்தி இயக்கம் என்று சொல்வது சாலப்பொருந்தும்.
பக்தி இயக்கத்தின் இந்திய/உலகப் பரவல்:
கி.பி. 6ம் நூற்றாண்டில் பிறந்தது எனக்கருத்தப்படும் பாகவத புராணம் பக்தி எனும் மடந்தை தெந்தமிழ் நாட்டில் பிறந்து, கர்நாடகம் வழியாக குஜராத் போன்ற வட மாநிலங்களுக்குப் பயணப்பட்டு பின் வங்களாத்தில் முதுமையுருகிறாள் என்று சொல்லுகிறது.
இக்கூற்றின் படியே தென் தமிழ் நாட்டில் தோன்றிய சைவ, வைணவ பக்தி இயக்கம் கர்நாடகத்தில் வேர் கொள்கிறது. இங்கொரு தியாகைய்யர் என்றால் அங்கொரு புரந்தரதாசர். இங்கொரு காரைக்கால் அம்மையெனில் அங்கொரு அக்கம்மாதேவி. இங்கொரு வள்ளலார் எனில் அங்கொரு பசவப்பா. இப்படி அங்கு செழித்து வளர்ந்த பக்தி இயக்கம் அண்டை மாநிலமான ஆந்திராவையும் பற்றுகிறது. இங்கு ஆழ்வார்கள் வந்தது போல் அங்கு அன்னமைய்யா எனும் அரிய வைணவ பக்தர் தோன்றி அழியாக் கீர்த்தனைகளை விட்டுச் செல்கிறார். இராமானுசர் காலத்திலிருந்து தமிழ்ப் பாசுரங்களை தெலுங்கு லிபியில் எழுதுவதும், திருப்பாவைப் பாடல்களை மார்கழி மாதத்தில் தமிழில் ஓதுவித்தலும் நடைபெற்று வருகிறது. இவர்களின் அரிய முயற்சியால் திருமலை திருப்பதி, பக்தி இயக்கம் விளக்கம் பெறும் தலமாக இன்றளவும் பேணப்பட்டு வருகிறது.
ஆண்டாள் பக்தி செய்த போது, “சிறுமானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்ற கருத்தைக் கொண்டிருந்தாள். இந்த மார்க்கத்தை வடநாட்டில் கடைபிடித்துக் காட்டியவள் மீராபாய் எனும் இராஜபுத்திர ராணி. அவளுக்கும் பிற்பட்டு குஜராத் மாநிலத்தில் நரசிம்ம மேத்தா எனும் பெரியவர் இதே வழியில் பக்தி செய்கிறார். இவர் இயற்றிய பாடல்தான் “வைஷ்ணவ ஜனதோ” எனும் பாடல். இதை மகாத்மா காந்தி அவர்கள் விரும்பி தனது பஜனைகளில் பாடுவார். அப்பாடலை நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள் [35]. அது பக்தி இயக்கம் மனிதனை எத்துணை அளவு மேம்படுத்தும் என்பதற்குச் சான்று. பல்லவி வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)சரணங்கள் பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;உறவென மனிதர்கள் உலகுள யாரையும்வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்)விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலைவிளங்கிட ஆசைகள் விட்டவனாய்ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயெனஉணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும்அவன்ஊரார் உடைமையைத் தொடமாட்டான்வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோஅவனே உண்மை வைஷ்ணவனாம். (வைஷ்)மாயையும் மோகமும் அணுகா தவனாய்மனத்தினில் திடமுள வைராக்யன்நாயக னாகிய சிறீரா மன்திருநாமம் கேட்டதும் மெய்ம்மறந்துபோயதில் பரவசம் அடைகிற அவனுடைப்பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்ஆகும்அவனே வைஷ்ணவனாம். (வைஷ்)கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்காம க்ரோதம் களைந்தவனாய்த்தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்தரிசிப் பவரின் சந்ததிகள்சுபமுடை வார்கள் எழுபத் தோராம்தலைமுறை வரையில் சுகமுறுவர்அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்அலைகடல் நீந்திக் கரை சேர்வார். (வைஷ்)
மேலும் வல்லபாச்சாரியார், சுவாமி நாராயண் போன்ற ஆன்மீகப் பெரியோர்கள் மீரா காட்டிய வழியில் அங்கு பக்தி செய்தனர்.
வடமேற்கு மாநிலங்களிலிருந்து அது வடகிழக்கேயுள்ள வங்காளத்திற்குப் பாயும் போது பக்தி இயக்கம் இந்தியா முழுமைக்கும் ஒளிவீசத்தொடங்கி பின் உலகம் முழுமைக்கும் அருள்பாலிக்கத்தொடங்கியது. ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சர்யர்கள் செய்து காட்டிய பக்தியை வங்காளத்தில் கிருஷ்ண சைத்தன்யர் செய்யத் தொடங்கினார். அவரது பக்தி இயக்கம் பல வங்காள ஆன்மீகவாதிகளைப் பாதித்து இருந்தாலும், குரு-சீடர் எனும் வழியில் அங்கு ஒளிவிளக்காகத் தோன்றுகிறார், பிரபுபாதா. இவர் அமெரிக்கத் தெருக்களில் “அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்36” என்று சொல்லும்படி ஹரி கீர்த்தனை செய்த போது அமெரிக்கக் குடிமக்கள் இவரைப் பின்பற்றத் தொடங்கினர். அன்று கலிபோர்னியக் கரைகளில் தோன்றிய இஸ்கான் இயக்கம் இன்று உலகு தழுவிய ஒரு பேரியக்கமாக நடை பெற்று வருகிறது. இராமனுசர், ஆழ்வார்களை முன்னுதாரணமாக இவ்வியக்கம் எடுத்துக் கொண்டு தளிர்நடை போடுகிறது.
பக்தி இயக்கம் தெற்கேயும், கிழக்கேயும் பாய்ந்தோடிய காலமுண்டு. தென்னிந்திய சைவ சித்தாந்தம் மிக வலுவாக வேரூன்றிய ஓர் பூமி இலங்கையாகும். பின் அங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா செல்கிறது. சமீபத்திய ஈழத்தவரின் பாரிய குடிபெயர்ப்பால் சைவ சித்தாந்த பக்தி மார்க்கம் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா என்று பரவியுள்ளது. இந்தப் பரவலால் ஐரோப்பிய மண்ணில் தமிழ்க் கோயில்களும், வழிபாடுகளும் பிரபலமாகத் தொடங்கியுள்ளன. ஹவாய்த் தீவில் சுப்ரமணிய சுவாமி எனும் வெள்ளை அமெரிக்கர் சைவ சித்தாந்த பக்தி மார்க்கத்தை நிருவுகிறார்.
பல்லவ, சோழர் காலங்களில் வணிகத்தின் பொருட்டும், அரசியல் நீட்சி காரணமாகவும் இந்து மதம் பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனிசியா, சியாம், கம்போடியா, வியட்நாம், சீனா, கொரியாவரை பரவுகிறது. பிலிப்பைன்ஸ் தீவுகளில் பெரிய தீவொன்றிற்குப் பெயர் பல்லவன் என்பது. தாய்லாந்து என்று அறியப்படும் நாட்டின் ஆதிப்பெயர் சியாம் என்பது. ஷியாம் என்றால் நீல வர்ணன் என்று பொருள்.
"காதல் கொண்டு கடல்வண்ணன் புராணமோதினான் நாரணன் காப்பென் றுரைத்தனன் [8]"
என்று மணிமேகலை இயம்பும் கடல் வண்ணன் புராணம் கிழக்கே பரவிய போது தாய்லாந்து மன்னர்கள் தங்கள் நாட்டிற்கே கடல்வண்ணன் என்று பெயர் வைத்தனர். “கற்பார் இராமபிரானை அன்றி மற்றும் கற்பரோ33” எனும் திருவாய்மொழிக்கிணங்க இராமகாதை தென்கிழக்காசியா முழுவதும் பரவுகிறது. மலேசிய அதிபர் பதவிப் பிரமாணம் செய்யும் போது “ஸ்ரீராம பாதுகாதுளி ஆணையாக” என்று சொல்லித்தான் பதவி ஏற்கிறார். மலேசியப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கி.பி. 13-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஹிகாய்த் செரிராமா என்ற மலாய் மொழி ராமாயணம் பாடமாக இருக்கிறது. மலேசிய சுல்தானை ராஜபரமேஸ்வர என்றும், ராணியை ராஜ பரமேஸ்வரி எனவும், அவர்களது மகனை லக்ஷ்மண எனவும் மலேசிய மக்கள் மரியாதையுடன் அழைக்கிறார்கள். பினாங்கிலுள்ள (மலேசியா) ஒரு மசூதியின் பெயர்ப் பலகையில் இந்த மசூதி 1974-ல் ஸ்ரீராம பாதுகையின் ஆணைப்படி கட்டப்பட்டது என்று காணப்படுகிறது. தாய்லாந்து நாட்டின் அரசர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொள்கிறார்கள். தற்போதுள்ள மன்னரின் பெயர் பூமிபால் அதுல்யதேஜ் 9வது ராமா ஆவார். கி.பி. 17-ம் நூற்றாண்டில் தாய் மொழியில் இயற்றப்பட்ட ராமகீர்த்தி எனப்படும் இராமகாவியம் பள்ளிகளில் பாடமாகப் போதிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டுக்கு குத்துச் சண்டை விளையாட்டு, அனுமன், வாலி,சுக்ரீவன் போன்ற வீரர்களின் சண்டை முறைகளை அடிப் படையாகக் கொண்டது என்பர். அங்குள்ள சில ஊர்களின் பெயர் அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி என்பன. இதே போல் உலகின் மிகச் சிறந்த இந்துக் கோயில்கள் கம்போடிய நாட்டிலுள்ள அங்கோர்வாட் எனும் பகுதியில் காணக்கிடைக்கின்றன.
பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர்ச்சாபம்நலியும் நரகமும் நைந்த; நமனுக்கிங் கியாதொன்று மில்லைகலியும் கெடும்கண்டு கொண்மின்; கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம் [37]
என்று ஆழ்வார் திருநகரியிலிருந்து (குருகூர்) முன்பொரு தமிழன் சொன்ன சொல் அப்படியே பலித்திருப்பது ஆச்சர்யம்தான்.
பக்தி இயக்கத்தின் மீள்பார்வை: காலத்தின் தேவை
பக்தி இயக்கம் என்பது புரையோடிப் போயிருக்கும் புற்றுநோய்க்கு மருந்து போல் தமிழ் மண்ணில் தோன்றிய இயக்கம். இப்பேரியக்கம் தோன்றி உலகமெலாம் பரவிய போதும் அதன் தேவை தமிழ் மண்ணிற்கு இன்றளவும் தேவையாய் இருப்பது காலத்தின் கோலம். தமிழ் மாணவர்களுக்கு தமிழ்ச் செவ்விலக்கிய பரிட்சயம் ஏற்பட வேண்டும். தமிழ்த் திருமறைகள் மீண்டும் பொலிவுடன் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்பட வேண்டும். மறைந்து போன புரட்சிக் கருத்துக்கள் மீண்டும் உயிர்ப்பித்து எடுத்தாளப்பட வேண்டும். அப்போது தமிழின் பெயரால், இறைப் பொதுமையின் பெயரால் ஒரு சமதர்ம சமுதாயம் இங்கு உருவாக வாய்ப்புண்டு.
மேலும் பக்தி செய்வதால் மன உளச்சல் குறைந்து சமூக அக்கறையும், உலகப் புரிதலும் ஏற்படுகிறது. தமிழ் மண்ணை விட்டு வணிக, சமூக, அரசியல் காரணங்களுக்காக இடப்பெயர்வு கொண்டுள்ள தமிழனுக்கு அவன் புகுந்துள்ள புதிய திணையில் பரிட்சயம் ஏற்படும்வரை பக்தி அவனை அந்நியப்படாமல் தற்காக்கிறது. அந்நிய மண்ணில் ஸ்திரப்படும் போது அப்புதிய திணைக்கேற்ற கருப்பொருளைக் கண்டு கொள்ள பக்தி உதவுகிறது. உதாரணமாக, பனித்திணையில் குடிபெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு கலாச்சார சிக்கலை சமனப்படுத்த பக்தி உதவியிருக்கிறது. பாலைக்குத் தெய்வம் வேண்டி நின்ற சங்கத்தமிழன் பகவதியையும், ஆதித்தியனையும் தெய்வமென்று வேண்டினர். அது மீண்டும் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய மண்ணில் நிகழ்ந்தது. அங்கு குடிபெயர்ந்த ஈழத்தமிழர்கள் அமைத்த கோயில்களில் அன்னை பராசக்தியே குடிகொண்டாள். காக்கும் தெய்வத்தை வேண்டி நிற்கும் தமிழனின் உளநிலை இங்கு நோக்கற்கரியது. ஆயின், அமெரிக்காவில் குடிபெயர்ந்த படித்த, பட்டம் பெற்ற இந்தியர்கள் அமைத்த கோயில்களில் ஆரம்பகாலம் தொட்டு வேங்கடவன் குடிகொள்கிறான். ஐந்திணை மரபை நன்கு உணராத புலம்பெயர் தமிழர்களில் பலர் தெய்வ பக்தியின்றி தற்கொலை செய்து கொண்டும், பிற அந்நிய மதங்களுக்கு மாறியும் தங்கள் வேர்களை இழந்து தவிக்கின்றனர். இப்புறச் சூழலில் பக்தி என்பது எப்போதும் இல்லாத அளவு முக்கியத்துவம் பெறுகிறது.



துணை நூற்பட்டியல்: -

1. Tamil Brahmi script in Egypt - The Hindu. Web source: http://www.thehindu.com/2007/11/21/stories/2007112158412400.htm

2. Silk Road - Wikipedia. Web source:

3. Khmer Empire - Wikipedia. Web source:

4. DARUMA - Web source:

5. N.Kannan 2007. Indians in Korea, workshop on Rising India and Indians in East Asia, Institute of Southeast Asian Studies, Singapore, 26-27 October 2006.


7. Bhakti movement - Wikipedia

8. ஆ.க.பார்த்தசாரதி, 1992. பெரியாழ்வார் பாசுரங்கள். பரணி வெளியீடு, சென்னை.9. கலித்தொகை,

9 (உரை) (துணைநூல் 8 லிருந்து)

10. மணிமேகலை 27. பக்.98-99. (துணைநூல் 8 லிருந்து)

11. A.K.Ramanujan, 1996. Poems of love and war. Oxford India Paperbacks, New Delhi, India.

12. நம்மாழ்வார், திருவாய்மொழி 1.1.9. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

13. நம்மாழ்வார், திருவாய்மொழி 10.7.1. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

14. ஆண்டாள், திருப்பாவை 29. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

15. ஆண்டாள், திருப்பாவை 28. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

16. ஆண்டாள், நாச்சியா திருமொழி 9.4. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

17. ஆண்டாள், நாச்சியா திருமொழி 10.9. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

18. ஆண்டாள், நாச்சியா திருமொழி 12.4. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

19. நம்மாழ்வார், திருவாய்மொழி 3.9.1. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

20. தொண்டரடிப்பொடியாழ்வார், திருமாலை 42-43. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

21. ஆண்டாள், நாச்சியா திருமொழி 1.5. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

22. நம்மாழ்வார், திருவாய்மொழி 3.7.9. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

23. தொண்டரடிப்பொடியாழ்வார், திருமாலை 39, நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

24. திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 9, நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

25. நா.கண்ணன். வைணவ பரிபாஷையும் பக்தி செய்தலும். ஆழ்வார்க்கடியான். Web source:

26. திருமழிசையாழ்வார், நான்முகன் திருவந்தாதி 81. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

27. வேங்கிடசாமி ரெட்டியார், முகவுரை, நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

28. திருமங்கை ஆழ்வார், திருநெடுந்தாண்டகம் 4, நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

29. கம்பன், சடகோபர் அந்தாதி, 1. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

30. திருவள்ளுவர், திருக்குறள் 972. மதுரைத் திட்டம். Web source:

31. தொண்டரடிப்பொடியாழ்வார், திருமாலை 22, நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

32. திருநாவுக்கரசர், தேவாரம், திருக்குறுந்தொகை 5-ம் திருமுறை.

33. நம்மாழ்வார், திருவாய்மொழி 7.5.2. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

34. நம்மாழ்வார், திருவாய்மொழி 5.2.1. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

35. வெ.ராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் - மூன்றாம் பாகம் பாடல்கள் 181- 251. மதுரைத்திட்டம். Web source:

36. நம்மாழ்வார், திருவாய்மொழி 5.8.5. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

37. நம்மாழ்வார், திருவாய்மொழி 7.5.1. நாலாயிர திவ்யப்பிரபந்தம். திருவேங்கடத்தான் திருமன்றம், சென்னை. 1973.

********************************************************

இக்கட்டுரை "உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் / இயக்கங்களின் பங்களிப்பு" எனும் தலைப்பில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் (மயிலாடுதுறை) மார்ச்சு திங்கள் 6,7,8, 2008 ஆகிய நாட்களில் நடைபெற்றகருத்தரங்கில் வழங்கப்பட்டது.

**********************************************************